தமிழியல்துறை
அண்ணாமலை அரசர் 1920-இல் உருவாக்கிய மீனாட்சிக் கல்லூரி, தமிழிசையும், தமிழ்ப் பண்பாட்டையும் வளர்க்கும் குறிக்கோள்களோடு வளர்ந்து அரசு விதிமுறைப்படி 1929-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகமாக உருவானது. இப்பல்கலைக்கழகத்தின் பெருமைக்குரிய முதன்மைத் துறைகளில் ஒன்றாகத் தமிழியல்துறை விளங்குகின்றது
தமிழ்நாட்டில் தனிமனிதரால் முதன் முதலில் உருவாக்கப்பெற்ற பல்கலைக்கழகம்; ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் உறுதுணையாய் நிற்கின்ற பல்கலைக்கழகம்; தளராத தொண்டால், தகவார்ந்த திட்டங்களால் தழைத்துச் செழித்து நூற்றாண்டை நோக்கி நடைபோடும் இப்பல்கலைக்கழகம் 2013 முதல் அரசு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்து வருகின்றது.
பல்கலைக்கழகமாக உருப்பெறுவதற்கு முன் மீனாட்சிக் கல்லூரியாக இருந்த பொழுது, தமிழுக்குப் புத்துயிர் பாய்ச்சிய தமிழ்த்தாத்தா பேராசிரியர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் முதல்வராக இருந்து சிறப்பித்த பெருமை தமிழியல்துறைக்கு உண்டு. அவரைத் தொடர்ந்து பேராசிரியர் கா.சு.பிள்ளை, சொல்லின் செல்வர் பேரா. ரா.பி.சேதுப்பிள்ளை, பேரா. சுவாமிவிபுலானந்தர், பேரா. நாவலர் சா. சோமசுந்தர பாரதியார், பேரா. பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், பேரா. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார், பேரா. லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார், பேரா. கோ.சு.பிள்ளை, பேரா. ஆ.இராமசாமிப் பிள்ளை, பேரா. வ.சுப. மாணிக்கனார், பேரா. வெள்ளைவாரணனார், பேரா. ச.அகத்தியலிங்கம், பேரா.ஆறு.அழகப்பன், பேரா.நா.பாலுசாமி ஆகியோர் தமிழியல்துறையின் தலைவர்களாக இருந்து தமிழுக்குச் சிறந்த பங்களிப்பினை ஆற்றியுள்ளனர். மகாவித்துவான் ரா. இராகவையங்கார், பேரா.ஆ.பூவராகவம்பிள்ளை, பேரா.ஞா. தேவநேயப்பாவாணர், பேரா. மு. அருணாசலம் பிள்ளை போன்ற பலரும் இங்குப் பணிபுரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது உலகத் தமிழ்மாநாட்டில் திருக்குறளுக்கென தனிஇருக்கை அறிவிக்கப்பட்டு, தமிழியல்துறைக்கு ரூபாய் 3 லட்சம் தமிழக அரசால் நிதி ஒதுக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 2015-இல் இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் ஒரு கோடி ரூபாய் திருக்குறள் இருக்கைக்கு வழங்கப்பட்டுத் திருக்குறள் ஆய்வு நிகழ்த்தப்பட்டு வருகிறது.
தமிழியல்துறையில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட அறக்கட்டளைகள் நிறுவப்பட்டு, அதன் வாயிலாக ஆண்டுதோறும் தலைச்சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழியல்துறையின் வரலாற்றுச் சிறப்புக்கு அதன் நூலகமும் ஒரு காரணமாகும். அறிஞர்களையும், ஆசிரியப் பெருமக்களையும், ஆராய்ச்சியாளர்களையும், மாணாக்கர்களையும் ஒருசேர உருவாக்குகின்ற விளை நிலமாகத் தமிழியல்துறை நூலகம் செயல்பட்டு வருகின்றது. இத்துறையில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் முனைவர்பட்டம் பெற்றுள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் இளமுனைவர் பட்டம் .பெற்றுள்ளனர். இத்தகைய பெருமைக்குரிய துறையில் பயின்று பட்டம் பெறுவது சிறப்புக்குரியதாகும்.